The news is by your side.

மாணவரின் எதிர்காலத்தை சூனியமாக்கும் பகிடிவதை….

0 22

index

எமது நாடு முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வியை இலவசமாக கற்றுக் கொடுக்கும் நாடாகும். அரசு கல்விக்காக ஒவ்வொரு வருடமும் கூடுதலான பணத்தை செலவு செய்கின்றது. ஒரு மாணவன் படித்து முடிக்கும் வரை பல இலட்சக் கணக்கான ரூபாய்களை அரசு செலவு செய்கின்றது. ஒவ்வொரு மாணவரும் பயன்பெறும் வகையில் சிந்தித்து செயற்பட்டால் ஒளிமயமான மகிழ்ச்சியான எதிர்காலத்தை அடையலாம்.

கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். காலா காலமாக இது மனிதனால் உணரப்பட்டு மனிதன் இயற்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றான். நிகழ்வுகளைக் கண்டு கற்றுக் கொள்கின்றான். அனுபவங்களினூடாகவும், பரிசோதனைகள் மூலமாகவும் ஆராய்ச்சிகள் மூலமாகவும் சுயகற்றல் மூலமும் கற்றுக்கொள்வதுண்டு. கற்றல் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

24-ragging
இலவசமாக கல்வியைப் பெற்றாலும் முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வியை முடிக்கும் வரை பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்விக்காக வெயில், மழை என்று பாராது உழைக்கும் பணத்தை மாணவர்களின் ஏனைய செலவுகளுக்காக செலவு செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளை உயர்படிப்புப் படித்து தங்களது குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளும்; துன்பங்கள் துயரங்கள் நீங்கிவிடும் என்று கனவு காண்கின்றனர். ஆனால், அந்த நிலை மாறி பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னர் அங்கு நடைபெறும் பகிடிவதை காரணமாக பதின்மூன்று வருடங்கள் மனதில் இருந்த எதிர்பார்ப்புக்கள் தவிடுபொடியாகும் நிலைமை ஏற்படுகின்றது. இதன் காரணமாக ஏற்படும் உடல் உள ரீதியான பாதிப்புக்கள் பின்வருமாறு,

ragging1
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பம்,

உள ரீதியான நோய்கள், உளத் தாக்கம்,

உடல் ரீதியான நோய்கள், உடல் தாக்கம்,

நிம்மதியற்ற, மகிழ்ச்சியற்ற வாழ்க்கை,

கல்வியை இடையில் விடுதல்,

மன அழுத்தம்,

போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்,

ஆளுமைக் குறைபாடு,

தன்னம்பிக்கை குறைவடைதல்,

சிறுநீரகம் செயலிழத்தல்,

இதய சம்பந்தமான நோய்கள்,

நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்லல்.

big_ragging
இது போன்ற விடயங்கள் பகிடிவதை காரணமாக நடைமுறையில் ஏற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லா நபர்களும் வாழும் காலமெல்லாம் நிம்மதி, சந்தோஷம் குலைந்து பாரிய இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் போது எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அது தலைகீழாக மாறி இருப்பதை கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் குடும்பம் சீரழிந்து விரக்தியடைந்து குழப்பமடைவதைக் காணலாம்.

இன்று உலகம் துரிதமாக முன்னேற்றமடைவதால் கல்வியும் துரித முன்னேற்றம் அடைந்து வருகின்றது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வாழ்க்கையைச் சீர் செய்யும் இடங்களாகவும் கற்றலுக்கான நிலையங்களாகவும் விளங்குகின்றன.

ஆனால், இளைஞர்களே! இதையெல்லாம் மறந்துவிட்டு நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள்? உங்களது பயணம் நடு வீதியில் கண்ணாம்பூச்சி விளையாடுவது போன்று ஆபத்தானது. இதையெல்லாம் எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு ஓட்டுனரோடும் நடத்துனரோடும் நீ யுத்தம் செய்து கொண்டு இருக்கின்றாய். உன் தோள்களில் இருக்கின்ற கனவும் கண்களில் இருக்கின்ற கனவும் ஒரு கிரகத்தையே உருவாக்க வல்லவை. ஆனால் அவையெல்லாம் மறந்து விலாசம் தெரியாத காரணங்களால் விரயமாகிவிடுகின்றன.
images
எனவே, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவச் செல்வங்களே! பல வருடங்களாக கொடிய பகிடிவதை காரணமாக எத்தனையோ வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்விமான்களை இழந்திருக்கின்றோம். எத்தனை குடும்பத்தின் நிம்மதி சந்தோஷத்தைக் கெடுத்துள்ளோம் என்பதை பகிடிவதை புரிவோர் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். பல வருடகாலம் கஷ்டப்பட்டு எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்று பலவித எதிர்பார்ப்புகளுடன் உயர் கல்வி கற்று வரும் பிள்ளைகளின் எதிர்பார்ப்பை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லாமல் நல்ல மாணவர்களாக மாற வேண்டும். பகிடிவதையை வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும்.

ragging_z_p12-say_0
ஏ.எல்.எஸ். ஆப்தீன்

Leave A Reply

Your email address will not be published.