The news is by your side.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அதிபர்மணி பஷீர் சேர் அவர்களின் சேவையினை கௌரவித்துப் பாராட்டி வாழ்த்தும் பெருவிழா…

0 54

unnamed (6) (நளீம் லதீப்) அதிபர்மணி என விருது பெற்ற பஷீர் சேர் அவர்கள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை 30 வருடங்களாக செதுக்கிச் செப்பம் செய்த சிற்பி . அன்னார் அந்தக் கல்லூரிக்கு செய்த சேவைகளுக்கு பிரதி உபகாரமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிகப் பிரமாண்டமான முறையில் அவரின் 30 வருட அதிபர் சேவையினை கௌரவித்துப் பாராட்டி வரவேற்கவுள்ளனர் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள்,மாணவிகள்,பாடசாலை SDC,சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் வாழ்த்தும் பெருவிழா…

1970க்கு முன் இப்பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர் கல்விவளர்ச்சியில் இருந்த பெரும் இடைவெளியை நிரப்ப இப்பகுதிக்கல்விமான்கள் தனவந்தர்கள் பொதுமக்கள் அடங்கிய குழுவினர் மிக அக்கறையுடன் செயல்பட்டதன் விளைவாக இவ்வமைவிடத்தில் சிறு நிலப்பரப்பில் இருந்த சாய்ந்தமருது அல்-அமான் வித்தியாலயமானது முன்னாள் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம்.அல்ஹாஜ்.எம்.சீ. அகமது அவர்களின் உறுதுணையுடனும் முன்னாள் கல்வி அமைச்சர் மர்ஹூம்.அல்ஹாஜ். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இன்றியமையாத ஒத்துழைப்புடனும் 01.01.1971 தொடக்கம் பெண்களுக்கான ஒரு தனிப்பாடசாலையாக கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் 01.03.1975ல் கணித பாடத்தில் விசேட பயிற்சி பெற்ற ஜனாப். ஏ.எச்.ஏ. பஷீர் அவர்கள் கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று வந்து இம்மாணவிகளின் கல்விக்கு ஒரு பேருபகாரமாக இருந்தது. கணிதபாடம் கசக்கும் என்ற மாணவிகளின் பொதுவான மனநிலையை முதல் வருடத்திலேயே மாற்றி கணித பாடத்தில் நவீன உத்திகளைக் கடைப்பிடித்துப் பயிற்சியளித்தார். அதே வருடத்தில் மாணவிகள் கணித பாடத்தை விருப்புடன் கற்றுச் சிறந்த பெறுபேறுகளை பெற்ற னர்.
சாய்ந்தமருதின் புகழ்பூத்த பெருமைக்குரிய குடும்பத்தில் உதித்த உயர்மிகு ஹமீது உடையார் அவர்களின் 1ம் புத்திரராகப் பிறந்த பஷீர் அவர்கள் அன்று ஒரு உதவி ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்து அதிபராக இணைந்து அவர் பணியாற்றிய 6 வருட காலங்களிலும் கல்லூரியின் ஸ்திரத்தன்மைக்காக கடுமையாக உழைத்தார். தனது கடமைக்கப்பாலுள்ள நேரங்களிலும் விடுமுறை காலங்களிலும் பாடங்களைக் கற்பித்தலுடன் நின்று விடாது கல்லூரியை வடிவமைத்தல்.. புறக்கிருத்தியச் செயற்பாடுகள் என்பவற்றில் அவர் வழங்கிய ஒத்துழைப்புகள்.. ஆலோசனைகள்.. என்பன இக்கல்லூரியின் வளர்ச்சியில் வரலாறுகளாகப் பதிவுசெய்யத்தக்கன. தவிரவும் இக்கல்லூரியை பசுமைவளம் கொழிக்கச் செய்வதிலும் இவருடைய பங்களிப்பும் ஆலோசனைகளும் இன்றியமையாதவையாயிருந்தன.

மஹ்முத்மகளிர் கல்லூரி எட்டுவருடகாலம் துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் போது ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தின் போது பாடசாலை சின்னாபின்னமாகிப் பெரும் அழிவுக்குள்ளானது. அச்சமயம் அழிவுற்ற கட்டிடங்கள்.. கொட்டில்கள்.. அனைத்தையும் வெகுதுரிதமாகச் சீர்செய்து கல்விப்பணி தொடர இராப்பகலாகப் பாடுபட்டோரில் பஷீரின் பெயர் முக்கியமாக இடம்பெறுகிறது.

தவிரவும் அவருக்கிருந்த பன்முகத்தன்மையான திறமைகள் காரணமாகப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்.. விழாக்கள்.. வைபவங்கள்.. சிறப்புடன் நிகழத்தக்க ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் எப்போதும் வழங்கிச் செயற்பட்டவர். பாடசாலையின் சகலதுறைகளிலும் இவரது பங்களிப்பு ஒன்று நிச்சயமாகப் பின்னணியிலிருக்கும்.

தான் ஒரு எழுத்தாளனாக இருந்து ~~அவள் செத்துக் கொண்டு வாழ்கிறாள்.. என்ற குறுநாவலை எழுதியதோடு நின்றுவிடாது மாணவிகளையும் எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்துவதற்காக ~கொடி என்ற காலாண்டுச் சஞ்சிகையை ஆரம்பித்தவர் அவர் மேலும் கல்லூரியின் பருவகால வெளியீடுகள் நினைவுமலர்கள் என பலவற்றிலும் அவரது எழுத்தாற்றல் விரவிக் காணப்பட்டது. பஷீரின் பல்வேறுபட்ட ஆற்றல்களையும்’ திறமைகளையும் அறிந்த அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இவரது சேவையை இரு வருட காலத்திற்கு கேட்டுப் பெற்றுப் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கல்லுர்ரி அதிபர் பதவி இவர்மீது திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதனை மிகத்துணிவுடன் அவர் பொறுப்பேற்று 30 வருட காலமாக ஒப்பாருமிக்காருமில்லாத தனிப்பெரும் அதிபர்மணியாக சேவையாற்றினார்.
(நளீம் லதீப்)

அதிபர் பஷீர் அவர்கள் ஒரு கலைப்பட்டதாரியாக இருந்தாலும் உள்நாட்டிலும் அரசாங்க அனுமதியுடன்; இந்தியா இங்கிலாந்து ஆகிய நாடுகளக்குச் சென்றும் முகாமைத்துவப் பயிற்சிகள் பெற்றுச் சிறந்த ஒரு நிர்வாகியாகத்; தனது கல்வித்தரத்தை அதிகரித்துக் கொண்டார்.

தவிரவும் இவரின் இனிமையான சுபாவத்தினாலும் சிறந்த அணுகுமுறையினாலும் அரசியற் தலைவர்கள் உயர் அதிகாரிகள்.. அனைவரினதும் பூரண ஆதரவைப் பெற்று கல்லூரியின் பௌதீக வளத்தினை அதிகரித்தார். அவற்றுள் பலமாடிக்கட்டிடங்கள்.. உயிரியல் இரசாயன பௌதீக விஞ்ஞான கூடங்கள்.. மனையியல்கூடம்.. மானவியர் விடுதி விஸ்தரிப்பு.. நுழைவாயில் அலங்கார அமைப்பு கல்முனை மாவட்டத்திலேயே முதலாவது நிர்வாகக் கட்டிடம்.. பள்ளிவாயிலும் கலாச்சார நிலையமும்.. திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகவிருக்கும் மேலும் இரண்டுமாடிக்கட்டிடங்கள்.. விளையாட்டு மைதானப் புனரமைப்பு என்பன அதிபர் பஷீரின் பேர் கூறும் வரலாற்று நிர்மானங்கள் ஆகும்.

அவை தவிர கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சகலதுறைகளிலும் மாணவிகளிடம் ஏற்பட்ட கல்வி மேம்பாடு இம்மாணவிகள் கபொத சாதாரண உயர்தரங்களில்; தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருவதிலும்… கோட்ட பிராந்திய மாவட்ட மாகாண மட்டங்களில் நடக்கும் விளையாட்டுப்; போட்டி.. தமிழ்த்தினப் போட்டி.. ஆங்கிலமொழிதினப்போட்டி என்பவற்றில் பங்குபற்றி பல சாதனைகள் நிலைநாட்டுவதிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்னும் உயர்தர விஞ்ஞான வகுப்பில் மாவட்டத்திலேயே முதலாம் இடத்தினை பலமுறை இக்கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளதானது இதனைக் கட்டியம் கூறுகிறது.

1983ம் வருடம் ஆறுமாணவர்களே சர்வகலாசாலைக்குச் சென்றனர். 2008ம் வருடம் 84 பேர் சர்வகலாசாலைப் பிரவேசம் செய்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் கணிணித்துறைகளிலும் விசேட ஆர்வம் காட்டி வரும் அதிபர் பஷீர் அவர்களின் காலத்தில் ஆங்கிலமொழிமூலம் மாணவிகள் கற்பதிலும் கணிணி வளநிலைய உருவாக்கத்திலும் அதிபரின் தூரநோக்கான சிந்தனை மேலும் வெளிப்பட்டு நிற்கின்றது.

பிரித்தானிய அரசினால் இலங்கையிலுள்ள முன்னணிப் பாடசாலைகளின் கல்வித்தரம் மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டு 2006-2009 ஆண்டுக்காண சர்வதேச விருது வழங்கப்பட்டதும் கிழக்கிலங்கையில் இக்கல்லுர்ரி மாத்திரமே இவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டதும் அதிபர் பஷீர் அவர்களின் பன்முகத்தன்மையான நிர்வாகத் திறமை காரணமாகவே!.
இக்கல்லுர்ரியில் கல்விகற்ற மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் நாலாபக்கமும் வைத்தியர்களாக பொறியியலாளர்களாக.. பேராசிரியைகளாக.. சட்டத்தரணிகளாக.. கணக்காளர்களாக.. நிர்வாகஸ்தர்களாக.. பட்டதாரிகளாக இலிகிதர்களாக பரந்துபட்ட துறைகளிலும் சேவையாற்றி வருவதை நாமறிவோம். இதுவே முஸ்லிம் மகளிரின் கல்வியியல் மீதான அதிபர் பஷீரின் திட்டமான ஒரு சமுதாயச் சாட்சியம் ஆகும். இதுவே அவரது நிர்வாக ஆளுமையையும் கல்வியியல் பங்களிப்பையும் எடுத்துக்காட்டப் போதுமானது.

(நளீம் லதீப்)

Leave A Reply

Your email address will not be published.