The news is by your side.

இஸ்லாம் மதத்தில் பல குழுக்கள் பள்ளிக்குள் அடித்து கொள்கின்றனர்- ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத்

0 47

vijitha_herath(அழகன் கனகராஜ்) “இஸ்லாம் மதத்தில் பல குழுக்கள் உள்ளன. பள்ளிக்குள் அடித்து கொள்கின்றனர். பள்ளிக்குள்ளையே வழக்குகளும் இடம்பெறுகின்றன. அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்த ஜே.வி.பி எம்.பியான விஜித ஹேரத், “இஸ்லாமியப் பிரிவினைவாதமே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாத்தது. இஸ்லாமிய பிரிவினைவாதம் அவ்வாறு செய்தமையால், மக்களின் உண்மையான பிரச்சினையை வெளியில் கொண்டுவரமுடியாத நிலைமை ஏற்பட்டது” என்றும் குறிப்பிட்டார். புத்தசாசன அமைச்சு, தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என்று ஒவ்வொரு அமைச்சுக்கும் தனித்தனி அமைச்சுக்கள் உள்ளன இது தவறான முன்னுதாரணமாகும். மதவாதக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இப்படியான மதவாத- அடிப்படைவாதக் குழுக்களை பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப்பிரிவு தான் கடந்த காலத்தில் வளர்த்துவிட்டது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை மறுக்கமுடியாத வகையிலேயே நாட்டில் பல சம்பவங்கள் நடந்தன. இஸ்லாம், பௌத்தமதவாதக் குழுக்களின் கடந்தகால செயற்பாடுகளை பார்க்கும்போது அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கின்றமை தெளிவாகின்றது. அந்த அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அவர்கள் வளர்க்கப்பட்டனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவு இவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியிருந்தால் அது பற்றி விசாரணை நடத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியின் யுகத்தில் தான் மதப்பிரிவினைவாத குழு உருவாக்கப்பட்டது. அது பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்டது. இராணுவ புலனாய்வு வழிநடத்தலுடன் அக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த மதவாதம் மற்றும் இஸ்லாம் மதவாதம் இவ்விரண்டு மதவாதங்களுக்கும் அப்பால் அரசியல் தேவையிருந்தது. அந்த அரசியல் தேவைக்காக இராணுவ புலனாய்வு துறை ஒத்துழைப்பு நல்கியிருந்தால் அவை தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டும். இலங்கையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகள், யுத்தக்காலத்தில் செயற்பட்டன. யுத்தக்காலத்தில் தான் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடத்தில் வக்கிரங்கள் விதைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் சர்வதேச புலனாய்வு அமைப்புகளே முன்னெடுத்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையை பொறுத்தவரையில், தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக இவ்வாறான வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளை அரசாங்கமே செயற்படுத்தக்கூடும். இவ்வாறான நிறுவனங்களுக்கு நிதி கொடுத்திருக்கக்கூடும் ஏனெனில் அவ்வாறான நிறுவனங்கள் ஏழ்மையான நிறுவனங்கள் அல்ல. சிங்கள-பௌத்தர்கள் உசுப்பேத்தி, ஜெனீவாவில் மின்சார கதிரைக்கு கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரசாரங்களை மேற்கொண்டனர். மக்களின் உண்மையான பிரச்சினையை மூடிமறைத்து இனவாதத்தை ஊட்டினர். அதேபோல, இஸ்லாமிய பிரிவினைவாதமே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்தது. இஸ்லாமிய பிரிவினைவாதம் அவ்வாறு செய்தமையால், மக்களின் உண்மையான பிரச்சினையை வெளியில் கொண்டுவரமுடியாத நிலமையை ஏற்பட்டது. இஸ்லாம் மதத்தை நிந்தித்தார் என்ற குற்றச்சாட்டில், டான் பிரசாத் என்பவர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர், சாஸ்திரம் கூறுபவராவார். எனினும், தன்னைப் பயன்படுத்தி பௌத்த அமைப்புகள் சில தங்களுடைய வயிற்றை நிரப்பிகொண்டதாக தற்போது தெரிவித்துள்ளார். இவ்வாறு காலம் கடந்த ஞானம் பிறந்தால்கூட பல்வேறான பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம். இஸ்லாம் பிரிவினைவாதமும், பௌத்தர்கள் என்று கூறிக்கொள்வோரும் மத தீவிரவாதத்தை தூண்டுகின்றனர். இதில் இரு பிரிவினரும் குளிர்காய்கின்றனர். வடக்கில் சி.வியும் அவ்வப்போது இனவாத தீயை ஊற்றிக்கொண்டிருக்கின்றார். அதன்போது, தெற்கில் இருக்கின்ற இஸ்லாம் பிரிவினவாதிகளும், பௌத்த பிரிவினைவாதிகளும் துள்ளிக்குதிக்கின்றனர். இவ்வாறான மனநிலையில், இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக எத்தனை, விகாரைகள், கோயில்கள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்களை நிர்மாணித்தாலும் அதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. மதமானது மக்களின் சுதந்திரமாகும். அடிப்படை உரிமையாகும். இஸ்லாம் என்பது அராபிய வசமாகும். அராபிய அர்த்தத்தின் பிரகாரம், இஸ்லாமுக்கு, சமாதானம். கீழ்படிதல் என்ற அர்த்தங்களும் உள்ளன. புத்தரும், மனிதர்களுக்கு இடையில் சமாதானத்தை வலியுறுத்தினால், மனிதனை மனிதனாக மதிக்குமாறே கூறப்பட்டுள்ளது எனினும், மதத்தைப் பயன்படுத்தியே இன்று முரண்பாடுகளை தோற்றுவிக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.