Ceylon Moors
Tamil News News Network

ஆப்பிழுத்த குரங்கின் கதையான நல்லாட்சி..!

0 71

மஹிந்த ஆட்சியில் நடந்த கொள்ளைகளை பிடிப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்களே கொள்ளையர்களாக மாறி,மாட்டிக்கொள்ளும் விடயமானது மிகவும் ஆச்சரியமானதாகும்.

மத்திய வங்கி முறியை ஏலம் விட்டதில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக, இந்த நல்லாட்சியினால் கள்வர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியினர்தான் கூக்குரல் இட்டார்கள்.

அதன் காரணமாக நல்லாட்சிக்காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் உங்களைபோல் கள்வர்கள் அல்ல என்று கூறிக்கொண்டு, பாராளுமன்ற கோப் குழுவினரை இதைப்பற்றி விசாரிக்குமாறு பணித்திருந்தார்கள்.

அந்த கோப் குழுவினர் முறி சம்பந்தமாக விசாரித்து நல்லாட்சியில் உள்ளவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டனர்,அதன் உண்மைத் தண்மையை மறைப்பதற்கு நல்லாட்சியில் உள்ளோர் எவ்வளவோ பாடுபட்டனர்,அதனை கூட்டு எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்த்தபோது ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தன்னுடைய பங்காக இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கோடு, இதனை பற்றி மேலும் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.

அந்த ஆணைக்குழு சுயாதீனமாக விசாரணைகளை முன்னெடுத்தபோது “கிணறு தோண்ட பூதம்” வெளியாகிய கதையாக மாறிவிட்டது நல்லாட்சியின் கதை,

ஆணைக்குழு விசாரணையை முடித்து இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை,ஆனாலும் மக்கள் மத்தியிலே யார் குற்றவாளிகள் என்று இப்போதே தெளிவாகி விட்டது.

காரணம் அதிலே சம்பந்தபட்ட தரப்பினரின் வாக்கு மூலங்கள் பத்திரிகைகளிலே தெளிவாக பிரசுரிக்கப்படுகின்றது,அதன் காரணமாக சாதாரண மக்களும் இவர்களுடைய தடுமாற்றமான வாக்குமூலத்தின் மூலம் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்து விடுகின்றார்கள்.

இப்போது ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு முன்னமே வெளிநாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டும் என்று, நல்லாட்சியில் உள்ளவர்களும் கூட கூறுவதை காண்கின்றோம்.

ஆகவே மஹிந்தவின் மகன்மார் லக்போஹினி கார் வைத்திருப்பதாகவும், கெலிகப்டர் வைத்திருப்பதாகவும் கூறிவந்தவர்கள் அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதையும் காண்கின்றோம்.அதே நேரம் அளுத்கம பிரச்சினைக்கு பின்னால் மஹிந்ததான் இருந்தார் என்றும், அதனை எங்கள் ஆட்சி வந்தால் விசாரிப்போம் என்றும் கூறி வந்தவர்கள்,இதுவரை அதனை என்னவென்றும் கூட பார்க்காமல் காலம் கடத்துவதும் அங்கே ஒன்றும் இல்லை என்ற காரணத்துக்காகவேதான் என்பது நிரூபணமாகிவிட்டது.

அப்படி விசாரணையொன்று நடக்குமாக இருந்தால் பல உண்மைகள் வெளியாகும், அப்போது நல்லாட்சியை கொண்டுவர மறைமுகமாக ஒத்தழைத்தவர்களின் சதி திட்டங்களும் வெளியாகும் என்பதும் காரணமாக இருக்கலாம் என்பதே உண்மையாகும்.

ஆகவே கள்வர்களை பிடிப்போம் என்று வந்தவர்களே களவெடுத்து மாட்டிக்கொண்டார்கள்,ஆனால் அதற்கு தீர்வாக அவர் ராஜினாமா செய்வது மட்டும் போதாது, மாறாக அவர் மூலம் அரசாங்கத்து ஏற்பட்ட நஷ்டத்தையும் அவரிடமிருந்து அறவிட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...