Ceylon Moors
Tamil News News Network

'அபாயா' சர்ச்சையும் சம்பந்தனின் நிலைப்பாடும். cv

0 28எஸ்.றிபான் –

தமிழர்களினால் மட்டுமன்றி முஸ்லிம்களினாலும் நன்கு மதிக்கப்படுகின்றதொரு அரசியல்வாதியாக

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளார். நாங்கள் இரா.சம்பந்தனின் தலைமையின் கீழ் ஒன்று பட வேண்டுமென்று கருதுகின்ற முஸ்லிம்களும் உள்ளார்கள். 

அவர் எப்போதும் நிதானப் போக்கையே கடைப் பிடிக்கின்ற ஒருவராகவும் இருந்து வந்துள்ளார். அவர் ஒரு போதும் தம்மை ஒரு இரண்டாம் நிலை அரசியல்வாதியாக  காட்டிக் கொள்வதற்கு விரும்பாத ஒருவர் எனலாம். ஆயினும், திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக் கூடாதென்ற விவகாரத்தில் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து அவரும் இரண்டாம் நிலை அரசியலுக்குள் அகப்பட்டு விட்டாரோ என்று எண்ண வேண்டி ஏற்பட்டுள்ளது.

சம்பந்தனின் கருத்து
திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியாது பாடசாலையின் கலாசாரத்திற்கு ஏற்ப சாரி அணிந்து கொண்டு வர வேண்டுமென்று பாடசாலையின் அதிபர் பணித்துள்ளார். இதனை குறித்த ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் முஸ்லிம்கள். அதனால், எங்களின் கலாசாரத்திற்கு ஏற்ப அபாயா அணிந்து கொண்டுதான் வருவோம். இது எங்களின் உரிமை என்று தெரிவித்துள்ளார்கள். இதனை அதிகாரிகள் மட்டத்தில் தீர்த்துக் கொள்ளாமல், ஒரு சிலர் பெற்றோர்களைத் தூண்டி முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளின் கலாசாரத்திற்கு ஏற்ப ஆடை அணிய வேண்டுமென்று வேண்டப்பட்டால், அதற்காக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால் தமிழ், முஸ்லிம் உறவில் மீண்டும் மிகப் பெரிய கீறல்களை ஏற்படுத்திவிடும்.

 இதனை உணர்ந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றினை எழுதி இருந்தார். அக்கடிதம் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இக்கடிதம் தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இரா.சம்பந்தன் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நல்லதொரு கருத்தை வெளியீடுவார் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால், இரா.சம்பந்தன் முஸ்லிம் ஆசிரியைகள் சாரிதான் கட்ட வேண்டும். அதுவே பிரச்சினைக்கு தீர்வு என்ற கருத்தில் பதில் கடிதமொன்றினை அமைச்சர் றிசாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரின் பதில் கடிதத்தையும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்று பல தடவைகள் வலியுறுத்திக் கூறியுள்ள இரா.சம்பந்தனின் பதில் கடிதம் முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு உட்பட்ட அபாயாவிற்கு எதிராகவே அமைந்துள்ளது. இத்தகையதொரு பதிலை முஸ்லிம்கள் எதிர் பார்க்கவில்லை. 
அவர் தமது பதில் கடிதத்தில் ‘நாம் தமிழ் பேசும் மக்கள்’ என்ற தந்தை செல்வாவின் கொள்கையைப் பின் பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். 

தமிழர்களும், முஸ்லிம்களும், தமிழ் பேசுகின்றவர்களாக இருந்தாலும் மத ரீதியாகவும், கலை, கலாசாரம், மரபு ரீதியாக மாறுபட்டவர்கள் என்பதனை இரர்.சம்பந்தன் மறுதலிக்க முடியாது. அதற்கு ஏற்ப உணவு, உடை, வணக்க முறைகளில் மாற்றங்கள் இருக்கும். இதனையும் ஏற்றுக் கொள்ளும் போதுதான் நாம் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றுமை ஏற்படும். 

இதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள் என்பதற்காக தமிழர்களைப் போன்று தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு சிந்திப்பதும், திணிப்பதுமே இனவாதமாகும்.
மேலும், அக்கடிதத்தில், ‘ஆசிரியைகளுக்கான உடை பற்றிய தேசியக் கொள்கையின் அடிப்படையிலும், இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்கு விதிகள் அடிப்படையிலும், செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என நான் நினைக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார். 

ஆசிரியைகள் சீரான ஒழுக்கத்தை பேணும் வகையில் ஆடை அணிய வேண்டுமென்பதுதான் ஆசிரியைகளின் உடை பற்றிய தேசியக் கொள்கையாக உள்ளது. ஆதலால், முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிவது கல்விக் கொள்கைக்கு மாற்றமானதல்ல. மேலும், கல்வி அமைச்சு முஸ்லிம் மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் போது தலையை மறைக்கும் பர்தாவுக்கு ஏனைய மத மாணவிகளை விடவும் கூடுதலான துணியை வழங்குகின்றது. 

முஸ்லிம் மாணவிகள் தங்களின் கலாசாரத்திற்கு அமைய உடை அணிய வேண்டுமென்பதற்காக இந்த ஏற்பாட்டை அரசாங்கம் செய்துள்ளது. முஸ்லிம் மாணவிகள் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றாலும் இவ்வாறுதான் துணி வழங்கப்படும். இங்கு பாடசாலையின் கலாசாரத்தைப் பார்ப்பதில்லை. 

மாறாக மாணவியின் கலாசாரமே கருத்திற் கொள்ளப்படுகின்து. இது போலவே முஸ்லிம் ஆசிரியைகளும் தங்களின் கலாசாரத்தைப் பேணும் உடையை அணிய முடியும். இதற்கு மாற்றமாக வேறு உடைகளை திணிப்பது அரசியல் யாப்புக்கும், அடிப்படை மனித உரிமை மீறலுக்கும் மாற்றமானதாகும.;  இவ்வாறு திணிக்கப்படும் போது நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும். 

ஆதலால், இரா.சம்பந்தன் அரசியல் காரணங்களுக்காக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் இந்துக் கல்லூரியின் அதிபரின் கருத்திற்கு ஏற்ப தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல இடங்களில் பின்னடைவினைக் கண்டுள்ளது. இந்த அச்சத்தின் காரணமாக இழந்துள்ள செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டக்காரர்களின் அசைவுக்கு கட்டுப்பட்டவராகவே அவர் முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணிய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

இதே வேளை, இரா.சம்பந்தனின் இந்த நிலைப்பாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி வன்மையாகக் கண்டித்துள்ளார். 

மேலும், இரா.சம்பந்தன் தமிழ், முஸ்லிம் உறவை வழியுறுத்திக் கூறினாலும், அவருக்குள் ஒளிந்து கிடக்கும் எண்ணப் பதிவை அடிக்கடி வெளியிட்டும் வந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அம்பாரை – பாலமுனையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் பெருந் தொகையாக திரண்டு இருந்த முஸ்லிம்கள் மத்தியில், முஸ்லிம்கள் அதிகாரத்திற்காக போராடாத சமூகம் எனக் கூறினார். இப்போது முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிவதற்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மட்டுமன்றி தமிழ்ப் பேரினவாதமும் தமது கோரப் பற்களைக் காட்டியுள்ளது. இப்படியாகவுள்ள நிலையில் எவ்வாறு இரா.சம்பந்தனை தமிழ் பேசும் சமூகங்களின் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயா எனும் சிறு விவகாரத்திற்கே தமது நெகிழ்வுத் தன்மையை காட்ட முடியாதவர்கள், ஆற்றினைக் கடப்பதற்கே முஸ்லிம்களை துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

முஸ்லிம் தலைமைகள்
முஸ்லிம் அரசியல் தலைமைகளும், மதத் தலைவர்களும் வழக்கம் போலவே திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள அபாயா பிரச்சினையிலும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் தான் விரும்பும் கலாசாரத்தையும், மதத்தையும் பின்பற்றுவதற்கும், அதற்கேற்றவாறு ஆடை அணிந்து கொள்வதற்கும் உரிமையுள்ளது. இந்த அடிப்படை உரிமை மேற்படி பாடசாலையில் மறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் உரிமை மறுக்கப்படும் போது அதனைப் பெற்றுக் கொள்வதற்குரிய நடழவடிக்கைகளை எடுக்காது மௌனமாக இருந்தால் அந்த உரிமை தேவையில்லை என்று ஒப்புக் கொள்வதற்கு சமமாகும். 
முஸ்லிம்கள் தமது மதவிழும்மியங்களைப் பின்பற்றுவதற்கு தடைகள் ஏற்பட்ட போதெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கண்டனங்களை வெளியிடுவதனையும், மேடைகளில் பேசுவதனையுமே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இதற்கு மாறாக தடுக்கப்படும் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எந்த போராட்டத்தையும் செய்ததில்லை. நீதிமன்றங்களின் உதவியை நாடியதில்லை. இத்தகையதொரு நிலைப்பாட்டையே ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபர் அபாயா அணியக் கூடாதென்று கட்டளையிட்ட விவகாரத்திலும் நடந்துள்ளார்கள். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதியுள்ள நல்லெண்ணக் கடித்தத்துடன் தமது கடமையை முடித்துக் கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அநுராதபுரம் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற வைபவமொன்றில் இச்சம்பவம் பற்றி உரையாற்றியதுடன் தமது கடமை முடிந்து விட்டதாகக் நினைத்துக் கொண்டிருக்கின்றார். பிரதி அமைச்சர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்வி அமைச்சரைச் சந்தித்துக் கொண்டார். அத்துடன் மௌனமாகியுள்ளார். அமீரலி ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியதுடன் எல்லாம் தீர்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கின்றார். 

இவ்வாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறும் அறிக்கைகள், பேச்சுக்கள், சந்திப்புக்களின் மூலமாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது போலவே அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை போன்ற சமூக அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. துருக்கி தொப்பி அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வர முடியாதென்று தடை விதிக்கப்பட்ட போது, அதனை எதிர்த்துப் போராடி துருக்கி தொப்பி அணிந்து கொண்டு நீதிமன்றம் செல்வதற்குரிய உரிமையைப் பெற்றுத் தந்த அப்துல் காதர் போன்ற தலைவர்கள் பிறந்த முஸ்லிம் சமூகத்தில் உள்ள இன்றைய தலைவர்கள் எது நடந்தாலும் அதனையிட்டு கவலை கொள்ளாது தானும், தன்பாடுமென்று இருக்கின்றதொரு நிலையைக் காண்கின்றோம். இந்நிலை தொடருமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் தமது தலைவர்களுக்கு எதிராக முதலில் போராட வேண்டியேற்படும். சமூகத்திற்காக குரல் கொடுக்கக் கூடிய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியேற்படும். 

ஹலால் உணவுப் பிரச்சினை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக் நிலையங்கள் மீதான தாக்குதல்கள், தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அண்மையில் திகன மற்றும் கண்டி மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அறிககைகளை விடுத்துக் கொண்டார்களே அல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இன்றைய அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகள் ஆளுந் தரப்பாகவே உள்ளன. இக்கட்சிகளின் ஆதரவாளர்கள் மிகவும் கீழ் நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸிற்கு இத்தனை அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன. மக்கள் காங்கிரஸிற்கு இத்தனை அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன என்று கூட்டல், கழி;த்தல் கணக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதுவா முஸ்லிம் சமூகத்தின் தேவைகள். முஸ்லிம் கட்சிகள் மாறிமாறி அமைக்கப்பட்ட அரசாங்களின் போது அமைச்சர் பதவிகளைத் தொடர்ச்சியாகப் பெற்று வந்துள்ளன. இந்த அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு ஒரு சில வீதிகளையும், கட்டடங்களையும் அமைத்துள்ளார்கள். அதற்குரிய கொமிசன்களையும் பெற்றுள்ளார்கள். இதனைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. முஸ்லிம்களின் காணிகளை மீட்டுக் கொடுத்துள்ளார்களா? தொழில் வாய்ப்பில் விகிதாசாரத்தைப் பேணியுள்ளார்களா? மதவிழுமியங்களைப் பின்பற்றுவதில் உள்ள தடைகளை அகற்றியுள்ளார்களா? முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்துள்ளார்களா? புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்று ஆலோசனைகளை கூட்டாக முன் வைத்துள்ளார்களா? முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்திற்காக ஒற்றுமைப்பட வேண்டுமென்று சிந்தித்துள்ளார்களா? என்று பார்க்கின்ற போது இது போன்ற எந்த பிரச்சினைகளிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனைய துறைத் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. 

இவ்வாறு நழுவல் போக்கைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் எனப்படுவோர் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்திற்காக உழைக்கமாட்டார்கள். இத்தகைய தலைவர்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் ஆதரவாளர்கள் திருந்தாத வரை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையை மாற்றியமைக்க முடியாது. ஒரு சமூகம் திருந்தாத வரை அச்சமூகத்தின் தலை விதியை அல்லாஹ் கூட மாற்றியமைக்க மாட்டான் என்பதனைப் புரிந்து முஸ்லிம்கள் செயற்பட வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை, பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்தஞானசார தேரர் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை நிர்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் முஸ்லிம் மாணவிகள் போன்று ஆடை அணிந்து செல்வதாக பொய்ப் பிரச்சாரமொன்றினைச் செய்துள்ளார். இவ்வாறு எந்த முஸ்லிம் பாடசாலையிலும் திணிக்கப்படவில்லை. தமிழ் மாணவர்கள் அவர்களின் கலாசாரத்தின் படியே முஸ்லிம் பாடசாலைகளின் ஆடை அணிந்து கொண்டு செல்லுகின்றார்கள். இதற்கு கூட முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஊமைத் தலைவர்கள் உதவாக் கறைகள் என்பதனை முஸ்லிம் புரிந்து கொள்ளும் காலம் எப்போது வருமோ என்று தெரியவில்லை.

ஓய்வு பெற்ற அதிபர் சேவையில் நீடிக்கலாமா?
திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளீர் இந்துக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள அபாயாப் பிரச்சினைக்கு பிரதான சூத்திரதாரியாக அப்பாடசாலையின் அதிபர் என்ற நிலையில் உள்ளவரே காரணமாகும். அவர்தான் முஸ்லிம் ஆசிரியைகளை அழைத்து பாடசாலையின் கலாசாரத்தை பேணும் வகையில் சாரி கட்டிக் கொண்டு வருமாறு கேட்டுள்ளார். இதற்கு முடியாதென்றால் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் திணித்துள்ளார்.

மேற்படி பாடசாலையில் அபாயாப் பிரச்சினை ஏற்பட்டு, பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. அவைகள் பெரும்பாலும் பாடசாலையின் அதிபர் தான் என்று சட்டத்திற்கு மாற்றமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒருவரின் தலைமையிலேயே நடைபெற்றுள்ளன.

அதாவது, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் ஏற்பட்ட அபாயா பிரச்சினையின் போது அதிபராகச் செயற்பட்டவர் கடந்த 2018 ஏப்ரல் இரண்டாம் திகதியுடன் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமக்கு சேவை நீடிப்பு வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அதற்குரிய அனுமதியை கல்வி அமைச்சு இது வரைக்கும் வழங்கவில்லை. இந்நிலையில் வீட்டில் ஓய்வு நிலையில் இருக்க வேண்டிய அவர் சட்டத்திற்கு விரோதமாக பாடசாலையில் அதிபராகச் செயற்பட்டுள்ளார். மட்டுமன்றி வரவு புத்தகத்தில் ஒப்பமிட்டுள்ளார். சம்பவத் திரட்டு புத்தகத்தில் (Log Book) அபாயா பிரச்சினை பற்றியும், வேறு விடயங்கள் பற்றியும் எழுதியுள்ளார். சட்டத்திற்கு மாற்றமாக பதவியில் இருந்து நடைமுறைப்படுத்திய அனைத்தும் குற்றமாகும். 

இவர் பாடசாலையின் கலாசாரத்தைப் பேணுவதற்கு தானே பொருத்தமானவர் என்று பெற்றோர்களுக்கு காட்டுவதற்காக அபாயா பிரச்சினையை கையில் எடுத்தாரா என்றும், இவர்தான் பெற்றோர்களைத் தூண்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்தாரா என்றெல்லாம் சந்தேகங் கொள்வதற்கு அதிக இடமுண்டு. மேலும், தனக்கு சேவை நீடிப்பு கிடைக்குமென்று கருதிக் கொள்ளும் ஒருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் சேவை நீடிப்பு கிடைக்கும் வரை கடமையாற்ற முடியுமா என்பதற்கும், சில வேளை அவருக்கு சேவை நீடிப்பு கிடைக்காது போனால் குறித்த நபர் பாடசாலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்குமா என்பதற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விளக்கம் தருதல் வேண்டும்.

மேலும், குறித்த பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய நபர் 2018 ஏப்ரல் 02ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றவர் என்பது பெரும்பாலும் பெற்றோர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஆதலால், இவர்கள் எதற்காக ஓய்வு பெற்றவரையே அதிபராகக் கொண்டு பாடசாலையின் நிர்வாகத்தை முன்னெடுத்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

மேலும், குறித்த அதிபர் ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்பதனை மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் தெளிவாக அறிந்தவர்கள். இருப்பினும் எதற்காக அவர் அதிபராக கடமையாற்றுவதற்கு அனுமதித்தார்கள் என்று புரியவில்லை.
மட்டுமல்லாது, சட்டத்திற்கு விரோதமாக அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தவரை முன்னிலைப்படுத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலந்துரையாடல்களை மேற்கொண்டமை எதற்காக என்றெல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது. 
இப்போது பாடசாலையை பிரதி அதிபர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இப்பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியவர் ஓய்வு பெற்ற கையுடன் ஏன் பாடசாலையை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாடசாலையில் அதிபர் ஒருவர் ஓய்வு பெறும் போது பிரதி அதிபரே தற்காலிகமாக பாடசாலையை பொறுப்பு எற்றுக் கொள்வார். இந்த வழக்கம் ஏன் இப்பாடசாலையில் பின்பற்றப்படவில்லை என்பதற்கு விடைகள் காண வேண்டியுள்ளது.

ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரிக்கு முஸ்லிம் ஆசிரியைகள் 2018 ஜனவரி 08ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 03 மாதங்களுக்கு மேலாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர்களின் உடைகள் விவகாரத்தில் வெளிச் சக்திகள் தலையீடுகளைச் செய்யவில்லை. அப்படி இருக்கையில், இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்பட்ட போது பெற்றோர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு வேறு சக்திகள் செயற்பட்டுள்ளனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த ஆசிரியைகளின் கணவன்மார்கள் அதிபரை எச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அதிபர் என்று செயற்பட்டவர் தன்னை யாரும் எச்சரிக்கை செய்யவில்லை. அவ்வாறு நான் யாருடனும் தெரிவிக்கவில்லை என்று பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார்.

இவைகளை கூட்டு மொத்தமாக வைத்து அவதானிக்கும் போது மேற்படி பிரச்சினை ஒரு திட்டமிட்ட கூட்டு சதியாக இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இருந்தாலும் முஸ்லிம்; ஆசிரியைகளின் ஆடை விவகாரத்திற் குறித்த ஆசிரியைகள் பாடசாலையின் கலாசாரத்தைப் பேண வேண்டுமென்று தெரிவித்தமை ஆசிரியைகள் தங்களின் கலாசாரத்தை விடவும் பாடசாலையின் கலாசாரத்திற்கு முதலிடம் அளிக்க வேண்டுமென்று திணிப்பதாகவே உள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் பாடசாலையின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பேச முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமை உண்மையாகும். முஸ்லிம்களின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. மேலும், பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் அபாயா குறித்து எதிர்வாதம் பேசிய போது முஸ்லிம்களின் உரிமைகள் என்று தெரிவித்தவர், தற்போது அதனை மறுதலிக்க முற்பட்டுள்ளமை மூலம் அவர் தானும் ஒரு இரண்டாம் நிலை அரசியல்வாதி போல் செயற்பட முற்பட்டுள்ளார் என்று தெரிகின்றது.

அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் வெற்றிக்காக கையாண்ட இனவாத சிந்தனை கல்வியலாளர்களிடையேயும் பரவியுள்ளது. இதன் உச்சக் கட்டமாக நாளைய தலைவர்களையும், நற்பிரஜைகளையும் உருவாக்கக் கூடிய பாடசாலைகளிலும் இனவாத சிந்தனைகள் தலை தூக்கி இருப்பது இலங்கையின் இன ஐக்கியத்தை மேலும் மோசமாக பாதிக்கச் செய்யும். இந்த அபாயத்திலிருந்து இளம் சமூதாயத்தையும், நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சகல இனத் தலைவர்களும் முயற்சிகளை எடுக்க வேண்டும். 

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...